Welcome to the Official website of Tamil Nadu Prison                      Prisoners are Wards of the State, not Slaves - Mahatma Gandhi.
     Home |  Contacts |  Links |  Become Reformation Partner  

News:

Events

சிறைத்துறை தலைமை இயக்குநர்,

சென்னை.8.

 

தீபாவளி நற்செய்தி

 நினைத்தாலே இனிக்கும் ஆம் தீபாவளி என்று நினைத்தாலே இனிக்கும்

     உன்னைக்கண்டு நான் ஆட

     என்னை கண்டு நீயாட

     உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி. ”

 என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி ஆடி மகிழும் நாள்.

 சந்தர்ப்பவசத்தால் சிறை இல்லங்களில் இருக்கும் இல்லவாசிகளுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துகள்.  இல்லவாசிகளுக்கு தமது குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்க்க பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்று பல காரணங்கள் கதைகள் இருந்தாலும், தீமைகள் அழிக்கப்பட்டு நன்மைகள் நிறையும் நாள் என்றே சொல்ல வேண்டும்.

      தருமத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்

      முடிவில் தருமம் வெல்லும்.

      என்பதற்கேற்ப தருமம் வென்ற நாள் தீபாவளி”.

       இல்லங்களில் தீபங்கள் ஏற்றப்படும் நாள்

       நமது மனதில் உள்ள ஆணவம், அகங்காரம், அழுக்கு

மற்றும் அறியாமையை நீக்கி ஒளி பிரகாசிக்கும் நாள்.

       இந்நாளில் நாம் ஒற்றுமையாக சகோதரத்துவம் சமுதாயத்தில் நிலைத்து நிற்க வழி வகை செய்வோம்.

    ஒவ்வொரு நாளும் ஒரு நன்மை செய்வோம் என்ற அளவில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

 நம்மை நாமே பயனுள்ளவனாக உருவாக்கிக் கொள்வதே ஒரு வித நன்மையாகும்.

 இதை மனதில் கொண்டு இல்லவாசிகள் மனம் திருந்துங்கள்;

பிறருக்கு உதவுங்கள்;

உங்களை உயர்த்திக் கொள்ள கல்வி பயிலுங்கள்;

கைவினைப் பொருட்கள் செய்திடப் பழுகுங்கள்.

 

உயர்ந்த சிந்தனை செய்து உங்களையே நீங்கள் அறிந்து கொள்ள முயலுங்கள்.

 

எனது இதயமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 


 

 

சிறைத்துறை தலைமை இயக்குநர்,

சென்னை.8.

 

புனித ரமலான் நல்வாழ்த்துகள்

இன்று 01.10.2008 புனித ரமலான் பண்டிகை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  இந்நன்நாளில் என் இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  மக்களிடையே சகோதரத்துவத்தை உணர்த்தும் உன்னத மார்க்கம் இஸ்லாம்.  மதம் என்றாலே மார்கம் வழி என்று அர்த்தம்.

     உன் மதமா என் மதமா 

     ஆண்டவன் எந்த மதம் என்ற கவிஞர் பாடலுக்கு எற்ப ஆண்டவனுக்கு எல்லை இல்லை, எல்லா மதங்களும் நல்வழியைத்தான் போதிக்கின்றன.

 

     இரு கிராமங்களை இணைக்க பாலம் அமைக்கப்படுகிறது.

      இரு மாநிலங்களை இணைக்க நான்குவழி சாலைகள் அமைக்கப்படுகிறது.

      இரு நாடுகளை இணைக்க விமானங்கள் விடப்படுகின்றன.

      ஆனால் நாம் இதயங்களை இணைக்க முயற்சி செய்யவதில்லை.

      தெய்வம் நீ என்றுணர்  தேசிய கவி பாரதியின்

      பொன் வாக்கு

     ராமலிங்க அடிகளார்......

     மதி வேண்டும்

     நின் கருணை நிதி வேண்டும்

     நோயற்ற வாழ்வு வாழவே வேண்டும்

      உனை மறவாதிருக்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுகிறார்.

      எவன் எல்லா ஜீவராசிகளையும் சமமாக நேசிக்கின்றானோ அவனே எனக்குப் பிரியமானவன், என்று கீதையில் கூறப்பட்டுள்ளது.

      சமுதாயத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள், வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்ட்டவை.  மக்கள் சேவைக்காக எவர் தம்மை அர்பணிக்கின்றாரோ அவர் தான் உண்மையாக உயர்ந்தவர்.

      குரானில் குறிப்பிட்டவாறு

 

     லக்கும் தீனக்கும் வல்லூதீன்

      ஒவ்வொருவருக்கும் அவரது மார்கம்.  மத நல்லிணக்கம்

தான் பிரதானம்.

      இதை மனதில் கொண்டு இந்த புனித நன்நாளில் ஒற்றுமையாக வாழ்ந்து நம் நாட்டினை மேன்மையுறச் செய்வோம்.


இல்லவாசிகளுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

 

 

சிறைத்துறை தலைமை இயக்குநர்,

சென்னை.8.

  

     பாரினிலே நல்ல நாடு எங்கள் பாரத நாடு.  உலகம் போற்றும் நமது நாடு சுதந்திரம் அடைந்து 61 வருடங்கள் முழுமை பெறும் இந்நந்நாளில் இல்லவாசிகளுக்கு சிறைத்துறை சார்பாக எனது உளம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் நாம் இந்த புனித நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக் காப்போம் என்று உறுதி கொள்வோம்.

      தமிழக சிறைகளின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட் வேண்டிய மிக முக்கியமான நாள் 2008-ம் வருடம் ஜீலை 28-ம் நாள்.  அந்நந்நாளில் பாளையங்கோட்டை இல்லவாசிகளில் உயர் கல்வி பயில்பவர்களில் 15 நபர்கள் பட்டம் பெற்றனர்.  இது நான் பட்டம் பெற்ற நாளில் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைந்தேனோ அது போன்று பன்மடங்காக மகிழ்ச்சி அடைந்தேன்.  அறிஞர் அண்ணா கூறியது போல சிறைச்சாலை ஒரு சிந்தனைக் கூடம்.  சிறை என்பது தவறுகளை உணர்ந்து திருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நற்கூடம்.

 கருங்கல் ஆன சிறை அல்ல,

கல்வி கற்பிக்கும் ஆசிரமத்தின் ஒரு அறை,

 “To Err is Human”தவறு செய்வது மனித இயல்பு என்று கூறுவார்கள்.  தவறு என்பது தவறி செய்வது.  எல்லா தவறுகளும் குற்றம் அல்ல.

 “தவறு என்பது தவறி செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் வருந்தி ஆகணும்

தப்பு செய்தவன் திருந்தியாகணும் என்ற பாடலை நினைவு கூறுகிறேன்.  அந்த வகையில் நீங்கள் திருந்தி புது மனிதர்களாக சமுதாயத்தோடு இணைந்து வாழ வழி வகை செய்ய நற்பண்புகளை கற்றுத்தரும் சிறைச்சாலை ஒரு அறச்சாலை.

     சட்டம் என்பது நடுவு நிலை பிறழாது எல்லோருக்கும் பாரபட்சமின்றி உதவி செய்வதற்காக நிலைத்து நிற்கும் என்பதை நாம் உணர வேண்டும்.  சிறை வளாகங்களில் இருக்கும் இல்லாவாசிகள் நல்ல முறையில் அவர்கள் மனம் திருந்தி புது மனிதர்களாக சமுதாயத்தில் திருந்தி வாழ்வதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு சிறைத்துறை களப் பணியாளர்களுக்கு உண்டு.

      மனிதாபிமானம், மனித நேயம் இவற்றை அடிப்படையாக கொண்டு சிறைத்துறை நிர்வாகம் அமைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.

      இல்லவாசிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு நிகழ்வு உண்டு.  சந்தர்ப்ப வசத்தால் அவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கி உள்ளார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.  பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஒ. ஹென்றி அவர்கள் எழுதிய சிறு கதையில் ஒரு வேலையில்லா பட்டதாரி வேலை கிடைக்காததால் அதனால் குற்றம் செய்து சிறைக்கு சென்று அங்கே தனக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டான்.  ஆனால் அவனுடைய நிலையை பார்த்து சமுதாயம் அவனை மன்னித்து அந்த சிறு குற்றங்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.  தன்னுடைய தவற்றை உண்ர்ந்த அவன் கோவிலுக்கு செல்கிறான் மன்னிப்பு கேட்பதற்காக.  ஆனால் அங்கு அவன் சென்ற நேரம் பிரார்த்தனை இல்லாத நேரம் தொழுகை இல்லாத நேரத்தில் ஏன் இங்கே வந்தாய்? திருடும் நோக்கத்தோடு வந்தாயா? என்று காவல் துறையினர் அவனை பிடித்துக் கொள்கின்றனர் என்று கதை முடிகிறது.  தன்னுடைய சந்தர்ப்ப வசத்தால் ஒருவன் சிறைவாசம் செல்ல நேர்கின்றது என்பதை இந்தக் கதை உணர்த்தும்.

      சிறையில் தான் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் “Discovery of India”   என்ற பெரிய நூலை எழுதினார்.  சுதந்திர போராளி பகத்சிங் சிறைவாசத்தின்போது முழுமையாக படிப்பதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

      ஒரு பள்ளி திறக்கும் போது ஒரு சிறை மூடப்படுகின்றது.  ஆனால் சிறைச்சாலையையே ஒரு கல்விக் கூடமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

      குற்றவாளிகளை தண்டிக்கும் அதே நேரத்தில் குற்றங்கள் களையப்பட வேண்டும்.  அப்போது தான் சமுதாயம் நல்ல முறையில் இயங்கும்.

      கைதிகளிலும் மனிதாபிமானம் உள்ளவர்கள் உண்டு என்பதற்கு ஒரு உண்மை நிகழ்வை நினைவு கூற விரும்புகிறேன்.  வேலூர் சிறையில் இருந்து ஒருவன் தப்பித்து சென்று விடுகிறான்.  ஒரு கல்யாண மண்டபத்திற்கு சென்று அங்கு உடைகளை மாற்றி வேறு ஏதாவது உடை கிடைத்தால் போட்டுக் கொண்டு சென்று விடலாம் என்று கல்யாண மண்டபத்திற்குள் நுழைகின்றான். மண்டபத்திற்கு சென்று சிறை உடைகளை களைந்து மாற்று உடையை அணியும் போது வெளியே ஆரவாரம் கேட்கின்றது.  ஒரு குழந்தை கழிவு நீர் தொட்டியில் விழுந்து விடுகின்றது.  தத்தளித்துக் கொண்டிருக்கிறது.  ஆடம்பரமான உடை உடுத்தி மண விழாவிற்கு வந்திருந்தவர்கள் அதைப் பார்த்து செய்வதறியாது கூச்சல் போடுகின்றனரே ஒழிய அந்த குழந்தையை காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இவனோ உடனே தொட்டியில் குதித்து அந்த குழந்தையை காப்பாற்றி உரியவர்களிடம் ஒப்படைக்கின்றான்.  அதற்குள் காவல் துறையினர் அங்கு வருகின்றனர்.  அவனை கைது செய்கின்றனர்.  அங்குள்ள எல்லோரையும்விட மனித நேயம் படைத்தவன் அவன்தான் என்பதை கூடியிருந்த எல்லோரும் உணர்ந்தனர்.  ஆதலால் இந்த நல்இயல்புகள் எல்லோரிடத்தும் உண்டு.  இதனை வெளி கொணர்ந்து அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு சிறைத்துறை களப்பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  சிறையில் பணிபுரியும் காவலர்கள் வார்டர்கள் அல்ல, அவர்களை திருத்தி நல்வழிபடுத்தும் வார்டன்கள் ஆசிரியர்கள்!.

      சட்ட அடிப்படையில், சட்டத்தை சார்ந்து வரக்கூடிய நீதி மாறக்கூடும்.  அது சட்டத்தில் வரக் கூடிய மாறுதலைப் பொறுத்தது.  ஆனால் மனசாட்சியின்படி நீதிக்கு மாற்றம் கிடையாது.  மனு நீதியில் இருந்து இன்று வரை நீதியின் அளவு கோல் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப மாறுபட்டு கொண்டுதான் வந்துள்ளது.  ஆனால் மன நீதி மனசாட்சியின் நீதி ஒன்று தான்.  குற்றம் செய்த நெஞ்சம் குறு குறுக்கும் என்பார்கள்.  தண்டனையில் இருந்து தப்பி விட்டாலும் மனசாட்சியின் முன் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க இயலாது.  இதை மனதில் கொண்டு மனதில் இருக்கும் அழுக்குகளையும், கெட்ட எண்ணங்களையும் அகற்றி, நல் இயல்வுகள் குடிபுகுவதற்கான பயிற்சியை நீங்கள் பெற வேண்டும்.  இதற்கு எல்லா விதமான உதவிகளையும், ஏற்பாடுகளையும் சிறைத்துறை உங்களுக்கு நல்கும்.

      உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

     பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

பார்ப்பதற்கு மனிதர்களிடையே அவையங்கள் யாவும் ஒற்றுமை இருந்தாலும், அவர்களுடைய பண்புகள், செயல்கள், குணங்கள் அவர்களை வித்தியாசப்படுத்தி காண்பிக்கின்றது.  நல்ல குணங்களை படைத்தவன் உயர்ந்து இருக்கின்றான்.

      உடல் உறுதியையும், மன உறுதியையும் மேம்படுத்திக் கொள்ள எல்லாவிதமான உதவிகளையும் சிறைத்துறை செய்து கொடுக்கும்.

      சென்றதினி மீளாது மூடரே நீர்

     எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

     கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

     குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

     இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர்

     எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு

     தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

     தீமையெல்லாம் அழிந்து போம் திரும்பி வாரா

 

என்ற பாரதியார் பாடலை தினமும் படித்து மன அமைதி பெறுங்கள்.

 மீண்டும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

 o0o

 
Additional Director General of Police (Prisons)
Tamil Nadu Prison Department
Chennai Metropolitan Development Authority Tower II
No-1, Gandhi Irwin Road, Egmore, Chennai-600 008.

Phone: 91-44-28521512 ,
              91-44-28521306
Fax: 91-44-28585942
E-Mail: tnprison@gmail.com
         

Home |  About us |  Organization Setup |  History |  Reformation |  Probation Branch |  Amenities |  Prison Industry |  Recruitment |  Gallery |  Statistics |  Contacts |  Links |  FAQs |  Site Map |  Disclaimer
Information provided by:
Prison Department , Government of Tamil Nadu
Web Master : JJeyaraj
Hosted by: National Informatics Centre
This Page last updated on: August 14, 2012
Site optimized for 1024 x 768 monitor resolution